தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்

தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 3 மாதங்களாகியும் பணம் வழங்காததை கண்டித்து, விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கதவுக்கு பூட்டு போட்டு பூட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-15 16:55 GMT
சேத்துப்பட்டு

ரூ.1 கோடிக்கு மேல் பாக்கி

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் பேரூராட்சியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. தேசூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நெல் மூட்டைகளை தேசூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக விவசாயிகளின் நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் பலமுறை ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரியிடம் கேட்டபோது அவர் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. மேலும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் பணம் தராமல் காலம்தாழ்த்தி வருகிறார். மேலும் அதிகாரிகள் அலுவலகத்திற்கு வராததால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

பூட்டுபோட்டு போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கதவை பூட்டுப் போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த தேசூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் லோகேஷ் தேசூர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் சீனிவாசன் என்ற வியாபாரி கடந்த 3 மாதங்களாக ரூ.54 லட்சம்பாக்கி வைத்துள்ளார். இதனால்தான் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்