ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது

சங்கராபுரம் அருகே ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-15 16:49 GMT
சங்கராபுரம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்  அருகே உள்ள தியாகராஜபுரத்தை சேர்ந்த  விவசாயி ஒருவர் பணத்துக்கு ஆசைப்பட்டு மரவள்ளிக்கிழங்கு பயிரில் ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வருவதாகவும், அவை தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 இதையடுத்து சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் தியாகராஜபுரத்தில் உள்ள குறிப்பிட்ட விவசாய நிலத்தில் அதிரடி சோதனை நடத்தினர். 
அங்கு மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு இடையே கஞ்சா செடிகள் செழித்து வளர்ந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி அழித்தனர். 
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தியாகராஜபுரத்தை சேர்ந்த விவசாயியான அய்யாக்கண்ணு(வயது 50) என்பவர்  விவசாய நிலத்தில் கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்