வைகை அணையில் விரைவில் முறைப்பாசனம் அமல்

வைகை அணையில் விரைவில் முறைப்பாசனம் அமல்படுத்துவது குறித்து பொதுப்பணித்துறையினர் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.

Update: 2021-07-15 15:03 GMT
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக 60 அடியிலேயே உள்ளது. வைகை அணையில் 6 ஆயிரத்து 91 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 67.39 அடியாக உள்ளது. அணையில் மொத்த நீர்இருப்பு 5ஆயிரத்து 178 மில்லியன் கனஅடியாக உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 32.45 அடியாகவும், நீர்இருப்பு 475 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது.
கடந்த ஆண்டு இதே நாளை ஒப்பிடும் போது வைகை அணையின் நீர்இருப்பு தற்போது 10 மடங்கு அதிகம் உள்ளது. மேலும் வைகை அணையில் இருந்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. எனினும் நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே வைகை அணை பாசனப்பகுதிகளில் முறைப்பாசனம் அமல்படுத்துவது குறித்து பொதுப்பணித்துறையினர் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர். முறைப்பாசனம் அமல்படுத்தினால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்