8,820 பேருக்கு கொரோனா தடுப்பூசி

8,820 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2021-07-15 14:19 GMT
துடியலூர் 

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 8,820 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவேக்சின் 2-வது தவணை

கோவை மாவட்டத்தில் கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 54 மையங்களில் நேற்று நடைபெற்றது. 

இதையொட்டி துடியலூர் வட்டத்துக்கு உட்பட்ட தாளியூர், நெ 24 வீரபாண்டி, ஆனைகட்டி, சோமயம்பாளையம், மத்திபாளையம் நெ 4.வீரபாண்டி மற்றும் மதுக்கரை, சூலூர், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளை யம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

காலை 10 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டது. 11 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை சமூக இடைவெளியை கடைபிடித்து நின்ற பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த பணிகளை மாவட்ட நிர்வாகம் அமைத்த குழு நேரில் ஆய்வு செய்தது. தாளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை கோவை வடக்கு கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தகுமாரி, சுகாதார ஆய்வாளர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதிய நடைமுறை

தடுப்பூசி செலுத்திக் கொள்ள மையங்களின் முன் இரவு முதலே பொதுமக்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

இதை தடுக்கும் வகையில், தடுப்பூசி செலுத்தப்படும் விவரம் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைகள் குறித்து காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அந்த வகையில் கொரோனா தடுப்பூசி மையங்களில் நேற்று காலை 10 மணி முதல் கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 11 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.  

8,820 பேருக்கு தடுப்பூசி

இதில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 820 கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி மையங்களில் குறைகள் மற்றும் புகார்கள் இருந்தால் 1077 என்ற கொரோனா கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை இடையர்பாளையம் அரசுப் பள்ளியில் நேற்றுமுன்தினம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இதற்கிடையே இடையர் பாளையம் சேடன் தோட்டம் அருகே உள்ள பள்ளியில் பொது மக்கள் வரிசையில் நின்று தங்களுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்றனர். அவர்களிடம் சுகாதாரத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றனர். 

அதை ஏற்க மறுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக கூறினர். உடனே அந்த பள்ளியிலும்  பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்