உடுமலை
அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடவேண்டும். கொரோனா தொற்று நோயால் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை ரூ.50 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சேவைத்துறைகளை பலப்படுத்த வேண்டும். ஊழியர்களின் பணிச்சுமையை போக்க தேவையான ஊழியர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உடுமலை வட்டக்கிளையின் சார்பில் உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க உடுமலை வட்டக்கிளை தலைவர் தா.வைரமுத்து தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் பாத்திமாபீபி தொடக்கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் அன்வருல் ஹக் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலை துறை, வேளாண்மை துறை, வருவாய் துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
-