விக்கிரமசிங்கபுரத்தில் மீண்டும் கரடிகள் நடமாட்டம்
விக்கிரமசிங்கபுரத்தில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகின்றன. கடந்த 8-ந்தேதி அதிகாலையில் விக்கிரமசிங்கபுரம் கட்டபொம்மன் காலனி பகுதிக்கு வந்த 3 கரடிகள், அங்கு வந்த தூய்மை பணியாளர்களை ஓட ஓட விரட்டியது. இதில் தூய்மை பணியாளர் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் விக்கிரமசிங்கபுரம் அருணாசலபுரம், மணிநகரம், மங்மம்மாள் சாலை பகுதி வழியாக வந்த 3 கரடிகள், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள வயல்வெளி பகுதிக்கு சென்றன. இதுெதாடர்பான காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் அடிக்கடி கரடிகள் நடமாடுவதால் அப்பகுதியினர் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாலை, இரவு நேரங்களில் வெளியில் செல்லவே அஞ்சுகின்றனர். எனவே கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து சென்று வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.