சாராயம் காய்ச்சிய 1,229 பேர் கைது

சேலம் மாவட்டத்தில் கொரோனா காலக்கட்டத்தில் சாராயம் காய்ச்சிய 1,229 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தெரிவித்தார்.

Update: 2021-07-14 21:24 GMT
சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா காலக்கட்டத்தில் சாராயம் காய்ச்சிய 1,229 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தெரிவித்தார்.
1,229 பேர் கைது
சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இந்த காலக்கட்டத்தில் சாராயம் காய்ச்சிய 1,229 பேர் கைது செய்யப்பட்டதுடன், 6 ஆயிரத்து 665 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 19 ஆயிரத்து 190 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டு உள்ளது. மதுபானம் கடத்த பயன்படுத்தப்பட்ட 15 கார்கள், 108 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெண்கள் உதவி மையம்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு புலனாய்வு திறன் மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. அதில் இதுவரை 21 மனுக்கள் பெறப்பட்டு 15 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து 250 இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் பலர் அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே உரிய அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஒரு வாரத்திற்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும் அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 58 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. அந்த மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
பாலியல் தொல்லை
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, குழந்தை திருமணம் செய்தால் அதற்கான தண்டனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதையும் மீறி பாலியல் தொல்லையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து வருகிறோம். மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சில வழக்குகளில் குண்டர் தடுப்பு சட்டமும் பயன்படுத்தப்படுகிறது.
திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க மாவட்டம் முழுவதும் 665 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. கஞ்சா, குட்கா விற்பனை செய்வது முற்றிலும் தடுக்கப்படும். மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறைந்து உள்ளது என்று பொதுமக்கள் கூறும் அளவிற்கு காவல் துறையின் பணிகள் சிறப்பாக இருக்கும். 
இவ்வாறு அவர் கூறினார். 
தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் அளிப்பதற்காக 181 என்ற இலவச அழைப்பு எண் குறித்த துண்டு பிரசுரத்தை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் வெளியிட்டார்.

மேலும் செய்திகள்