எடப்பாடி பழனிசாமி படம் வைக்க கோரி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்தை அலுவலகத்தில் வைக்க வலியுறுத்தி கூட்ட தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்தை அலுவலகத்தில் வைக்க வலியுறுத்தி கூட்ட தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நாட்டாண்மை கழக கட்டிடத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் ரேவதி ராஜசேகரன் (பா.ம.க.) தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து ஆவேசமாக பேசத்தொடங்கினர். மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி படம் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த படம் அகற்றப்பட்டு உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி படத்தை வைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
அதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்-அமைச்சர் என்பதால் அவரது படம் அலுவலகத்தில் உள்ள மற்ற முன்னாள் முதல்-அமைச்சர்களின் படத்தின் அருகே வைக்க வேண்டும். தலைவர் இருக்கை அருகே வைக்கக்கூடாது என்று கூறினர்.
வாக்குவாதம்
அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். எனவே அவரது படத்தை தலைவர் இருக்கையின் பின்புறம் மேல் உள்ள சுவரில் வைக்க வேண்டும் என்று கூறினர். உடனே தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அவரது படத்தை வைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லையே என்று கூறினர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அறையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. படம் மட்டுமே உள்ளது. அந்த அறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்க வேண்டும் என்று தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது பா.ம.க.-தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
கையெழுத்திட மறுப்பு
இதைத்தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகள் செய்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி படம் வைத்தால் தான் கூட்ட தீர்மானத்தில் கையெழுத்து போடுவோம் என்று கூறி கையெழுத்திட மறுத்து கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர்.
பின்னர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், அ.தி.மு.க. கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தற்போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படம் வைக்கப்படும். மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி படம் வைப்பது குறித்து விரைவில் கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரேவதி ராஜசேகரன் உறுதி கூறினார்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். நேற்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.