திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது - ரூ.52 லட்சம் நகைகள், பொருட்கள் மீட்பு

பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து ரூ.52 லட்சம் மதிப்பிலான நகைகள், பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-14 21:05 GMT
பெங்களூரு:
 
4 திருடர்கள் கைது

  பெங்களூரு பேகூரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவை உடைத்து தங்க நகைகள், பணம், பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க பேகூர் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பிரபல திருடர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர்.

  விசாரணையில், அவா்கள் வர்த்தூரை சேர்ந்த தேவேந்திரா (வயது 24), கே.ஆர்.புரத்தை சேர்ந்த கணேஷ்குமார் (29), பீனியா 1-வது ஸ்டேஜ் பகுதியை சேர்ந்த காந்தராஜ் (46), சந்தோஷ் (36) என்று தெரிந்தது. இவர்கள் 4 பேரும் பேகூர், உளிமாவு, மைகோ லே-அவுட், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரத்தில் நோட்டமிடுவார்கள். அப்போது பூட்டி கிடக்கும் வீடுகளை 4 பேரும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

ரூ.52 லட்சம் மதிப்பு

  பின்னர் நள்ளிரவில் அந்த வீடுகளின் கதவை உடைத்து நகைகள், பணம், பொருட்களை திருடுவதை 4 பேரும் தொழிலாக வைத்திருந்தனர். இவ்வாறு வீடுகளில் திருடும் நகைகளை விற்று கிடைக்கும் பணத்தை அவர்கள் ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளனர். ஏற்கனவே திருட்டில் ஈடுபட்டதாக 4 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு மீண்டும் அவர்கள் வீடுகளில் திருடி வந்துள்ளனர்.

  கைதான 4 பேரும் கொடுத்த தகவலின் பேரில் ஒரு கிலோ தங்க நகைகள், 120 கிராம் வெள்ளி, 2 விலை உயர்ந்த கேமராக்கள் மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.52 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களை கைது செய்திருப்பதன்மூலம் பேகூர், உளிமாவு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 13 திருட்டு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான 4 பேர் மீதும் பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்