கர்நாடகத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
கர்நாடகத்தில் ஏரிகளின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
பெங்களூரு:
ஏரிகளின் பாதுகாப்பு
கர்நாடகத்தில் ஏரிகளை பாதுகாக்க வேண்டும் என்றும், ஏரிகளின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் (பபர் ஜோன்) உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசுக்கு உத்தரவிட கோரியும் ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த மனு நேற்று ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையிலான அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் மாநில அரசுக்கு சில உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
அந்த உத்தரவில், "கர்நாடகத்தில் ஏரிகளை பாதுகாக்க வேண்டியது அவசியம், சுற்றுச்சூழலில் ஏரிகளும் ஒரு அங்கம். மாசு இல்லாத சூழலில் வாழ்வது ஒவ்வொருவரின் உரிமை. ஏரிகளை பாதுகாக்க ஏரியின் கரையில் இருந்து 30 மீட்டர் நீளத்திற்கு பாதுகாக்கப்பட்ட பகுதி என்று வரையறுக்கப்பட்டு உள்ளது.
அனைவரின் கடமை
ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும், அவற்றின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தாலும் அவற்றை அகற்ற வேண்டும். ஏரிகளை பாதுகாப்பது அனைவரின் கடமை. ஏரிகளை புனரமைக்க வேண்டும்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.