மயானத்துக்கு 11 செண்ட் நிலத்தை கொடுத்து உதவிய விவசாயி

சத்தியமங்கலம் அருகே மயானத்துக்கு 11 செண்ட் நிலத்தை விவசாயி ஒருவர் கொடுத்து உதவினாா்.

Update: 2021-07-14 20:58 GMT
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் தட்டாம்புதூர் கிராமம் உள்ளது. அங்குள்ள காலனியை சேர்ந்த பொதுமக்கள், உயிரிழந்தவரின் உடல்களை தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்து வந்தனர்.
எனவே பொது மயான வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். 
இந்தநிலையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பழனிதேவி, சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.சி.பி.இளங்கோ மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் தட்டாம்புதூருக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த மயான நிலத்துக்கு உரிமையாளரான அரசூரை சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவரை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது மயானத்துக்கு தேவையான 9 ெசன்டு நிலம், வழிப்பாதைக்கு 2 செண்ட் நிலம் என மொத்தம் 11 செண்ட் நிலத்தை மயானத்துக்கு அளிக்க முன்வந்தார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் செய்திகள்