மூதாட்டியை கொன்று தங்க நகைகள் கொள்ளை

துமகூரு அருகே மூதாட்டியை கொன்று தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2021-07-14 20:35 GMT
பெங்களூரு:
  
மூதாட்டி கொலை

  துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா ஹூலியார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யலநாடு கிராமத்தை சேர்ந்தவர் லலிதாம்பா (வயது 64). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ளான். தனது மகனுடன் தோட்டத்து வீட்டில் லலிதாம்பா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லலிதாம்பாவின் செல்போனுக்கு, அவரது உறவினர் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை.

  இதனால் சந்தேகம் அடைந்த உறவினர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது லலிதாம்பா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஹூலியார் போலீசாருக்கு, அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து லலிதாம்பாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல்குமாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

தொழிலாளிக்கு வலைவீச்சு

  அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் லலிதாம்பா தனியாக வசிப்பவரை அறிந்த, அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான சித்தராமா என்பவர் நேற்று முன்தினம் குடிபோதையில் லலிதாம்பா வீட்டுக்கு வந்தது தெரிந்தது. இதனை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். லலிதாம்பாவுக்கு தேவையான உதவிகளை அவர் தான் செய்து கொடுத்து வந்துள்ளார்.

  மேலும் நேற்று முன்தினம் லலிதாம்பா அணிந்திருந்த நகைகளை சித்தராமா கொள்ளையடித்து உள்ளார். இதுபற்றி அவா் போலீசில் புகார் அளித்து விடுவார் என்பதால், துணியால் லலிதாம்பாவின் கழுத்தை நெரித்து சித்தராமா கொலை செய்துவிட்டு, தங்க நகைகளுடன் தலைமறைவானது தெரியவந்தது. அந்த சந்தர்ப்பத்தில் லலிதாம்பாவின் மகன் வீட்டில் தூங்கியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஹூலியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சித்தராமாவை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்