அச்சக அதிபர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை
சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 45 பவுன் நகையை மர்ம நபர்கள் ெகாள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி,
சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 45 பவுன் நகையை மர்ம நபர்கள் ெகாள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அச்சக அதிபர்
சிவகாசி கருப்பண்ணன் வீதியை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 47). அச்சக அதிபரான இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி குடும்பத்துடன் மதுரைக்கு சென்ற அவர் பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பழனிக்குமார் குடும்பத்தினர் சிவகாசி திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு இருந்த பீரோ திறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அதில் வைக்கப்பட்டிருந்த நகைகளை சரி பார்த்த போது 45 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது.
போலீசில் புகார்
பின்னர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து பழனிகுமார் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மலையரசி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவம் நடந்த வீடு மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால் கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை. அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் ஏதாவது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.