அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கரூர்
ஆய்வுக்கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை காலத்தில் தொடர்மழை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பெய்யும் மழையால் காவிரி மற்றும் அமராவதி ஆற்றின் கரையோரங்களில் இருக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், எந்தவொரு உயிரிழப்புக்கும் இடமளிக்காத வகையிலும் அனைத்துத்துறை அலுவலர்களும் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உணவுப்பொருட்கள் உள்பட அத்தியவாசிய பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுதல், தேவையான மருந்து பொருட்களை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.
65 இடங்கள் தேர்வு
வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களை அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்க ஏதுவாக கரூர் மாவட்டத்தில் பள்ளிகள், சமுதாயக்கூடங்கள் என ஏற்கனவே, 65 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனை பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
அவசர உதவி கட்டுப்பாட்டு அறை
மின்தடை ஏற்பட்டால் உடனே சரிசெய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். வெள்ள காலங்களில் ஆற்றில் வரும் கூடுதல் தண்ணீரின் அளவை கண்காணித்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை தெரியப்படுத்த வேண்டும்.
மழை வெள்ள காலங்களில் உதவி தேவைப்படுவோர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு உதவி மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்,
இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.