சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை

செல்போனில் அடிக்கடி பேசியதால் ஆத்திரம் அடைந்து சேலையால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-14 18:10 GMT
கணபதி

செல்போனில் அடிக்கடி பேசியதால் ஆத்திரம் அடைந்து சேலையால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இரும்பு வியாபாரி

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது 36), இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி உமாதேவி (28). இவர்களுக்கு அர்வின் (6), ஆரோன் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 

செல்லையா தனது குடும்பத்தினருடன் கோவை கணபதி வி.ஜி.ராவ் நகர் விவேகானந்தர் வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவரது மனைவி உமாதேவி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் செல்லையா தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இதுகுறித்து அவரிடம் கேட்டார்.

கழுத்தை இறுக்கி கொலை

அப்போது அவர் தனது தோழியுடன் பேசுவதாக கூறி சமாளித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவ்வப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இந்த நிலையில்  உமாதேவி செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டு இருந்து உள்ளார்.

இதனைப்பார்த்து ஆத்திரமடைந்த செல்லையா தனது மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்லையா உமாதேவியின் கழுத்தை சேலையால்  இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

வியாபாரி கைது 

இது குறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உமாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான செல்லையாவையும் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

செல்லையா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ஆவாரம் பாளையத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் உமாதேவிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இதுகுறித்து அறிந்ததும் செல்லையா அந்த பகுதியில் இருந்து காலி செய்துவிட்டு கணபதி பகுதிக்கு குடிவந்தார். 

செல்போனில் பேச்சு 

இருந்தபோதிலும் உமாதேவி செல்போனில் அந்த வாலிபருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று உமாதேவி செல்போனில் அதிகநேரம் பேசியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. 

குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்காவது சென்றுவிடுவேன் என்று அவர் கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, சேலையால் கழுத்தை இறுக்கி மனைவியை செல்லையா கொலை செய்து உள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்