வேதாரண்யத்தில் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது
வேதாரண்யத்தில் நேற்று 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. மேலும் போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.;
வேதாரண்யம்;
வேதாரண்யத்தில் நேற்று 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. மேலும் போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
கடல் உள்வாங்கியது
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, மணியன்தீவு ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப்பள்ளம் வாணவன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை கடல் திடீரென உள்வாங்கியது. இப்பகுதிகளில் நேற்று காலை வரை கடல் பகுதி வழக்கமாக இருந்த நிலையில் மாலை திடீரென 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. குறிப்பாக வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் மாலை நேரத்தில் கடற்கரை பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் கடல் நீர் உள்வாங்கிய பகுதி களில் கார் ஓட்டி மகிழ்ந்தனர்.
மீனவர்கள் கவலை
இந்தநிலையில் ஆழ்கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் ஆறுகாட்டுத்துறையில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற பெரும்பாலான மீனவர்களுக்கு குறைந்த அளவே மீன்கள் கிடைத்தன. பல மீனவர்கள் மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். இதனால் அவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
டீசல் செலவு
இதுகுறித்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கூறியதாவது:-
கடந்த இரண்டு நாட்களாக ஆழ்கடல் பகுதியில் ராட்சத அலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதில்லை. சிறிய பைபர் படகில் 5 முதல் 10 கிலோ மீன்களே கிடைக்கின்றன. இதனால் கடலுக்கு சென்று வரும் எங்களுக்கு(மீனவர்களுக்கு) டீசல் செலவுக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை. எனவே பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். நாள்தோறும் ஆறுகாட்டுதுறையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லும் ஆனால் கடந்த 2 நாட்களாக பத்துக்கும் குறைவான படகுகளே மீன்பிடிக்க செல்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.