நீலகிரி எல்லைகளில் தீவிர வாகன சோதனை

பிற மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-07-14 17:50 GMT
ஊட்டி

பிற மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. இதனால்  மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சான்றிதழ் கட்டாயம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. 

அதன்படி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. பிற மாநிலங்களில் இருந்து வர இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு அதிகம் பேர் வந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் இ-பாஸ் நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டு இ-பதிவு நடைமுறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. 

வெளியிடங்களில் இருந்து நீலகிரிக்கு அதிக வாகனங்கள் வந்து செல்கின்றன. பிற மாநிலங்களில் இருந்து வருகிறவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்று வருகிறார்களா என்று மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாகன சோதனை

போலீசார், வருவாய் துறையினர், மருத்துவ குழுவினர் இணைந்து சோதனை மேற்கொள்கிறார்கள். பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகிறது.

 கேரளா மாநில எல்லையை ஒட்டி உள்ள சோதனை சாவடிகள் மட்டுமின்றி பர்லியார், குஞ்சப்பனை சோதனை சாவடிகள் வழியாக பிற மாநில வாகனங்கள் வருகின்றன. கடந்த சில நாட்களாக தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களில் பிற மாநிலங்களை சேர்ந்த நபர்கள் வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் வைத்து உள்ளார்களா, இ-பதிவு பெற்று இருக்கிறார்களா என்று சரிபார்க்கப்படுகிறது. இல்லையென்றால் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால் அங்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

 சுற்றுலா பயணிகள் வர தடை இல்லை என்பதால் ஊட்டிக்கு பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து அதிகம் பேர் வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்