கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்
அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் வீட்டில் இருந்தபடியே பாடங்களை கற்கின்றனர். இதனை குன்னூர் கல்வி மாவட்ட அதிகாரி நேரில் சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி
அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் வீட்டில் இருந்தபடியே பாடங்களை கற்கின்றனர். இதனை குன்னூர் கல்வி மாவட்ட அதிகாரி நேரில் சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
கல்வி தொலைக்காட்சி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மேலும் நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவர்கள் தடை இல்லாமல் பாடங்களை படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக சில அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களை படிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் குன்னூர் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாது என்பதால் வீடுகளில் இருந்தபடியே கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை படிக்கிறார்களா என்று குன்னூர் கல்வி மாவட்ட அதிகாரி சுவாமி முத்தழகன் திடீரென வீடு, வீடாக சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிகாரி ஆய்வு
தொடர்ந்து ஊட்டி அருகே கேத்தி பாலடா கிராமத்தில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் கல்வி தொலைக்காட்சி மூலம் நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து 9-ம் வகுப்பு மாணவி ஜீவிதா, 11-ம் வகுப்பு மாணவி நர்மதா ஆகியோர் வீட்டில் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதை ஆய்வு செய்ததோடு, வகுப்பு வாரியாக கல்வி தொலைக்காட்சி நேர அட்டவணையை வழங்கினார்.
அப்போது கல்வி தொலைக்காட்சி பயன் உள்ளதாக இருக்கிறது என்று மாணவிகள் தெரிவித்தனர். பாடங்களை குறிப்பு எடுத்து எழுதுவதற்காக எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. சிறந்த முறையில் தேர்ச்சி பெற அறிவுரைகளை வழங்கினார்.
அறிவுரை
அதேபோல் பிற மாணவ-மாணவிகள் வீடுகளுக்கும் நேரில் சென்று கிடைக்கும் நேரத்தை கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்க பயன்படுத்துகிறார்களா என்று ஆய்வு செய்தார். ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக பள்ளி ஆசிரியர்களை தொடர்புகொண்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.
இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, கொரோனா பாதிப்பால் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டிலிருந்தே கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை படிப்பது எளிதாக உள்ளது என்றனர்.