நீலகிரியில் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

தொடர் மழையால் ஊட்டியில் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பந்தலூரில் 4 வீடுகள் சேதம் அடைந்தன.

Update: 2021-07-14 17:49 GMT
ஊட்டி

தொடர் மழையால் ஊட்டியில் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பந்தலூரில் 4 வீடுகள் சேதம் அடைந்தன.

தொடர் மழை

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. ஊட்டியில் நேற்று மழை பரவலாக பெய்து கொண்டே இருந்தது. மேகமூட்டம் மற்றும் காற்று காரணமாக கடும் குளிர் நிலவியது. தொடர் மழையால் ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

 வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரிக்கிறது. இதன்படி ஊட்டி பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளளவான 50 அடியில் 29.90 அடியாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. 

23 அடி கொள்ளளவான மார்லிமந்து அணையில் 6 அடியாகவும், 39 அடி கொள்ளளவான டைகர்ஹில் அணையில் 28.40 அடியாகவும், 31 அடி கொள்ளளவான தொட்டபெட்டா அப்பர் அணையில் 16.5 அடி ஆகவும் அதிகரித்து இருக்கிறது. நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் அணைகள் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன.

குடிநீர் வினியோகம்

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஊட்டி நகராட்சியில் பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து 1-வது, 2-வது, 3-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணை மூலம் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பிற அணைகளில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் எடுக்கப்படுகிறது.

நகராட்சிக்கு தினமும் 11 எம்.எல்.டி. (ஒரு எம்.எல்.டி. 10 லட்சம் லிட்டர்) என 110 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது என்றனர்.

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு 

நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை அனுமாபுரம் பகுதியில் நேற்று பலத்த காற்று காரணமாக மரம் வேருடன் முறிந்து விழுந்தது. சாலையின் குறுக்கே விழுந்ததால் அரசு பஸ் உள்பட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது.

4 வீடுகள் சேதம்

கூடலூர் பந்தலூர் பகுதிகளில் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பொன்னானி, சோலாடி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது. காற்றின் காரணமாக சாலையோர மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்ததால், கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தொடர் மழையின் காரணமாக பந்தலூர் பகுதியில் 2 வீடுகளின் சுவர்களும், உப்பட்டி அருகே உள்ள மேஸ்திரி குன்னு பகுதியில் 2 வீடுகளின் சுவர்களும் இடிந்து விழுந்து சேதமடைந்தன. 

இந்த வீடுகளை தாசில்தார் தினேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் தேவராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் சாந்தி, இளநிலை உதவியாளர் அப்துல்சக்கீர் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.

மழையளவு

ஊட்டியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-7.2, நடுவட்டம்-41, கிளன்மார்கன்-30, அவலாஞ்சி-61, எமரால்டு-13, அப்பர்பவானி-52, கூடலூர்-19, தேவாலா-26, செருமுள்ளி-35, பாடாந்துறை-29, ஓவேலி-20, பந்தலூர்-66.4, சேரங்கோடு-24. பந்தலூர், அவலாஞ்சியில் 6 சென்டி மீட்டர் மழை பெய்தது.

மேலும் செய்திகள்