தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்
திருப்பூர்,
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று பல்லடம் வட்டார கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அத்திக்கடவு குடிநீர் திட்டம்
பல்லடம் வட்டார கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துகுமாரசாமி தலைமையில் நிர்வாகிகள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அத்திக்கடவு குடிநீரை உடனடியாக அனைத்து ஊராட்சிகளுக்கும் உயர்த்தி வழங்கவேண்டும். அத்திக்கடவு குடிநீர் திட்டம்- 3-ஐ மிக விரைவாக செயல்படுத்த வேண்டும். இரண்டாவது குடிநீர் திட்டத்தில் விடுபட்ட ஊராட்சிகளை சேர்க்க நடவடிக்கை எடுப்பதோடு குடிநீர் அளவை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் பில்லூர் முதல் திருப்பூர் மாவட்ட எல்லையான காரணம்பேட்டை வரை தனிக்குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கட்டிடங்கள், சாலைகள், சிறு பாலங்கள் கட்டப்படுவது போல் வீடற்ற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை சேர்த்து செயல்படுத்த வேண்டும். இதன் மூலமாக கூடுதல் நிதி ஆதாரங்களைத் தேடாமல் ஏற்கனவே உள்ள நிதி ஆதாரத்தின் மூலமாக அனைவருக்கும் வீடு திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்த முடியும்.
குடிநீர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் காலி இடங்களை நிரப்ப வேண்டும். தூய்மை காவலர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் அதிகரிக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு, நிறைவேற்றப்பட்ட பணிகளுக்கான நிதி விடுவிக்கப்படவில்லை. இதனால் ஒப்பந்ததாரர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த நிதியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.