சிதம்பரத்தில் தேரோட்டம் ரத்து: கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்த நடராஜர் 5 மணிநேரம் மட்டுமே பக்தர்கள் தரிசனம்

சிதம்பரத்தில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து கோவில் உட்பிரகாரத்திலேயே நடராஜர் வலம் வந்தார். இதில் 5 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2021-07-14 17:18 GMT
சிதம்பரம், 

நடராஜர் கோவில்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சன விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  
கொரோனா தொற்று கட்டுப்பாடு  காரணமாக விழா பக்தர்கள் இன்றி கோவில் உட்பிரகாரத்திலேயே நடைபெற்று வருகிறது. மேலும் விழாவுக்கான சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர், சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குறிப்பிட்ட நேரங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 
கோவில் உட்பிரகாரத்தில் நடத்த முடிவு
இந்த நிலையில் தேரோட்டம் மற்றும் திருவிழா எப்போதும் நடைபெறுவது போன்று நடைபெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. 
மேலும் கோவில் உள்பகுதியிலேயே பக்தர்கள் யாரும் இன்றி, தேரோட்டம் மற்றும் ஆனித்திருமஞ்சன விழாவை நடத்த அறிவுறுத்தியது. இதனால் கோவில் தீ்ட்சிதர்கள் கோவில் உட்பிரகாரத்திலேயே சாமி வலம் வர முடிவு செய்தனர். 
அதன்படி நேற்று காலை 5 மணிக்கு நடராஜ பெருமானுக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிகள் சித்சபையில் இருந்து புறப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

பக்தர்களுக்கு அனுமதி

பின்னர் காலை 9 மணி முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்படி பக்தர்கள் கீழ சன்னதி வாசல் வழியாக கோவிலுக்கு வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர், நடராஜர், சிவகாமசுந்தரி, சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளை தரிசனம் செய்தனர். 
பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது. அதன்வழியாக பக்தர்கள் மதியம் 2 மணி வரை சென்று சாமி தரிசனம் செய்தனர். இதன்பிறகு பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப் படவில்லை. பின்னர்   கோவில் நடை அடைக்கப்பட்டது. 

இன்று தரிசன விழா

விழாவின் சிகர நிகழ்ச்சியான தரிசன விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் சாமிக்கு மகா அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளது. 
தொடர்ந்து மதியம் 2 மணியளவில் ஆனித்திருமஞ்சன விழா தரிசனம் நடைபெறுகிறது. இதில் நடராஜரும், சிவகாமசுந்தரியும் ஆனந்த நடனமாடியபடி சன்னதிக்கு செல்ல உள்ளனர். தரிசன விழாவை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 
தரிசன விழா முடிந்த பிறகு இரவு 10 மணிவரை பக்தர்கள் சாமி தரிசனம் அனுமதிக்கப்படுவர். 
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். மேலும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்