அண்ணாகிராமம் ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு கவுன்சிலர்களுக்கிடையே வாக்குவாதம்; குடிநீர் பாட்டில்கள் வீச்சு

அண்ணாகிராமம் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் குடிநீர் பாட்டில்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2021-07-14 17:10 GMT

நெல்லிக்குப்பம், 

ஒன்றியக்குழு கூட்டம்

நெல்லிக்குப்பம் அருகே அண்ணாகிராமம் ஊராட்சி் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவரும், அ.தி.மு.க.வை சேர்ந்தவருமான ஜானகிராமன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜான்சிராணி தென்னரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அலுவலக மேலாளர் மீரா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட இளநிலை உதவியாளர் ரவி தீர்மானங்களை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது கவுன்சிலர் ஜெயச்சந்திரன் (சுயே), அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பழுது நீக்கம் மற்றும் புதிதாக வைப்பது தொடர்பாக யார் அனுமதி வழங்கினார்கள் எனவும், பி.என். பாளையம் பகுதியில் சிமெண்ட் சாலை போடுவதற்கு யார் அனுமதி வழங்கினார்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு கவுன்சிலர் ராஜசேகர் (தி.மு.க), இதுதொடர்பாக தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். 

நாற்காலியை வீச முயற்சி

இதைகேட்ட கவுன்சிலர் அருள் செல்வம் (வி.சி.க),    மேற்கண்ட கேள்விகளை கேட்க யார் அதிகாரம் வழங்கினார்கள். மேலும் அவர்கள் தங்களது பகுதிகளுக்குட்பட்ட குறைபாடுகள் குறித்து கோரிக்கை வைக்கவேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து ராஜசேகர் மற்றும் அருள்செல்வம் ஆகியோர்  குறிப்பிட்டு 2 தீர்மானத்தை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? யாரேனும் தூண்டுதலின் பேரில் இது சம்பந்தமாக கேட்கிறீர்களா? என ஜெயச்சந்திரனிடம் கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நிலவியது.
அப்போது ராஜசேகர் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து வீச முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஒன்றிய அலுவலக ஊழியர்கள் ராஜசேகரை சமாதானம் செய்தனர். இருப்பினும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் மேஜை மீது இருந்த குடிநீர் பாட்டில்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

பரபரப்பு

அப்போது ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களை சமாதானம் செய்தார். இதையடுத்து ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்குட்பட்ட குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன் ஒவ்வொரு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர் ‌. இந்த சம்பவம் காரணமாக அண்ணாகிராமம் ஒன்றியக்குழு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்