வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2021-07-14 16:43 GMT
புதுக்கோட்டை, ஜூலை.15-
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மூலங்குடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது26). இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி தனது உறவினர் மகளான 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
ஆயுள் தண்டனை
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கார்த்திக்கு போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவில் ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு பிரிவில் ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் ரூ.1 லட்சத்து50 ஆயிரம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அங்கவி ஆஜராகி வாதாடினார். இந்த பாலியல் வழக்கில் புலன் விசாரணை செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்