கொடைக்கானல் அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை

கொடைக்கானல் அருகே கிராமத்துக்குள் காட்டு யானை புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.;

Update: 2021-07-14 16:42 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, கணேசபுரம், அஞ்சுவீடு, புலியூர், கோம்பை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. மேலும் அந்த வனப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டத்தைவிட்டு பிரிந்த ஒற்றை காட்டு யானை பல்வேறு இடங்களில் அட்டகாசம் செய்து வருகிறது. 
இந்தநிலையில் நேற்று மாலை அந்த யானை பேத்துப்பாறை கிராமத்துக்குள் புகுந்தது. அங்குள்ள ரேசன் கடை பகுதியில் அந்த யானை முகாமிட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். உடனே இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பட்டாசுகள் வெடித்தும், சத்தமிட்டும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்