கேரள பெண் பாலியல் விவகாரத்தில் கண்ணூரில் முகாமிட்டு 2வது நாளாக பழனி போலீசார் விசாரணை

கேரள பெண் பாலியல் விவகாரத்தில் கண்ணூரில் முகாமிட்டு 2-வது நாளாக பழனி போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2021-07-14 16:36 GMT
பழனி:
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், அதே ஊரை சேர்ந்த 38 வயது நபருடன் கடந்த மாதம் 19-ந்தேதி பழனிக்கு வந்தார். அப்போது அவர்கள் பழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். அதன்பின்னர் பழனியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
மேலும் அந்த பெண்ணுடன் வந்த நபர், கண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பழனிக்கு சென்றபோது அங்கு தனது மனைவியை சிலர் காரில் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாகவும், இதுதொடர்பாக பழனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த தகவல் ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி தமிழக-கேரள மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வாட்ஸ்-அப் தகவலை வைத்து, கேரள பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக பழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பெண் அளித்த புகார்கள் உண்மைதானா? என்பது குறித்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பழனிக்கு வந்த கேரள பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. 
இந்தநிலையில் பழனி தனிப்படை போலீசார் நேற்று 2-வது நாளாக கண்ணூரில் விசாரணை நடத்தினர். அதில், முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் இந்த வழக்கில் உண்மை தன்மையை அறிய பழனியில் கேரள பெண் தங்கியிருந்ததாக கூறப்படும் விடுதியில் தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். ஆனால்  அங்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை.

மேலும் செய்திகள்