மேல்வீராணம் நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை

நெல் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதங்களாகியும் பணம் வழங்காததை கண்டித்து மேல்வீராணம் கொல்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-07-14 15:17 GMT
காவேரிப்பாக்கம்,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையை வழங்காமல் கடந்த மூன்று மாதங்களாக அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. 

அதன்படி சோளிங்கர் அடுத்த மேல்வீராணம் பச்சையம்மன் கோவில் அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 97 விவசாயிகளிடமிருந்து 12 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அந்த நெல் மூட்டைகளுக்கு, மூட்டை ஒன்றுக்கு 80 ரூபாய் வீதம் 12 ஆயிரம் மூட்டைகளுக்கு 9 லட்சம் ரூபாய் முன்பணமாக அதிகாரிகள் வாங்கியதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் முற்றுகை

ஆனால் கொள்முதல் செய்யப்பட்ட 12 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கான சுமார் ரூ.1 கோடியை தங்களுக்கு வழங்காமல், நெல் மூட்டைகளை மழையில் நனைய வைத்து அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் இரண்டு முறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்