கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று பயன் பெறலாம். கலெக்டர் அமர் குஷ்வாஹா தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்று பயனடையலாம் என்று கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-14 15:01 GMT
திருப்பத்தூர்,
-
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் உதவிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம், கந்திலி, பேரணாம்பட்டு ஆகிய வட்டாரங்களில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள், 59 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 3 கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 3 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், 2 மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், 2 கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் 19 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.

இக்கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த வட்டியில், திருப்பி செலுத்தும் வகையில் பயிர்க்கடன், விவசாய நகைக் கடன், பொது நகைக்கடன், கறவை மாட்டுக் கடன், சுய உதவிக் குழுக்கள் கடன், தனி நபர்க்கடன், சிறு வணிகக் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், தானிய ஈட்டுக்கடன், பண்ணை சாராக் கடன், வீட்டுக்கடன், வீட்டு அடமானக் கடன், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளக் கடன், தொழில் முனைவோர் கடன், தாட்கோ கடன், கல்விக் கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

பயன்பெறலாம்

தற்போது கொரோனா தொற்று காலத்தில் வேலை இழந்து தவிக்கும் பட்டதாரி இளைஞர்கள், நலிவடைந்துள்ள கைவினை கலைஞர்கள், சாலையோர மற்றும் நடைபாதை சிறு, குறு வியாபாரிகள், பொது மக்கள், சிறு வணிகர்கள் ஆகியோருக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

உரிய காலத்தில் கடன்களை திருப்பி செலுத்தும்  கடன்தாரர்களுக்கு வட்டி மானியத்துடன் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே தற்போது கொரோனா நெருக்கடியால் கந்து வட்டியில் சிக்கி தவிக்காமல் மேற்கண்ட கடன்களுக்காக தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தேவையான கடனுதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்