நெல் சாகுபடியை கைவிட்ட விவசாயிகள்

வைகை ஆறு வறண்டு கிடப்பதால் விவசாயிகள் நெல் சாகுபடியை கைவிட்டு மாற்று பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.

Update: 2021-07-14 13:43 GMT
தேனி: 

வைகை ஆறு
மேகமலை வனப்பகுதியில் வைகை ஆறு உற்பத்தியாகிறது. மூலவைகையாக உற்பத்தியாகும் இந்த ஆறு காந்திகிராமம், வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, முருக்கோடை, கண்டமனூர், அய்யனார்புரம், அம்மச்சியாபுரம், குன்னூர் வழியாக வைகை அணைக்கு செல்கிறது.

அங்கிருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இந்த வைகை ஆறு பயணிக்கிறது. இறுதியில் இந்த ஆறு வங்கக்கடலில் கலக்கிறது. அம்மச்சியாபுரத்துக்கும், குன்னூருக்கும் இடையே வைகையுடன் முல்லைப்பெரியாறு சங்கமிக்கிறது. வைகை ஆறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து கடலில் சங்கமிக்கும் இடம் வரை சுமார் 258 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.

வறண்ட வைகை
ராமநாதபுரம் வரை ஆறு பாய்ந்தாலும் பெயருக்கு தான் வைகை ஆறு. அதில் ஓடும் தண்ணீர் முல்லைப்பெரியாற்று தண்ணீராகவே உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வைகை ஆற்றில் கோடையிலும் தண்ணீரை பார்க்க முடிந்தது. கோடை காலத்திலும் வைகை ஆற்றில் மக்கள் குளிப்பதோடு, குடிநீருக்காக தண்ணீர் எடுத்தும் வந்தனர். 

ஆனால், நாளடைவில் இந்த ஆற்றில் தண்ணீர் ஓடும் நாட்கள் குறையத் தொடங்கி விட்டன. ஆண்டின் பெரும்பாலான நாட்கள் ஆறு வறண்டே கிடக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு மூலவைகையில் 190 நாட்கள் தண்ணீர் ஓடியது. அதன்பிறகு ஓரிரு மாதங்கள் தண்ணீர் ஓடுவதே அதிசயமாகி விட்டது. அதேநேரத்தில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வைகை அணையில் சேமிக்கப்பட்டு பிற மாவட்டங்களுக்கு திறக்கப்பட்டு வருகிறது.

மாற்றுப்பயிர் சாகுபடி
இதனால், ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் வைகை ஆற்றின் நீரை நம்பி நெல் சாகுபடி செய்த பகுதிகளில் மாற்றுப் பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். குறிப்பாக அம்மச்சியாபுரம், குன்னூர் பகுதிகளில் செங்குளம் கண்மாய், கருங்குளம் கண்மாய் ஆகிய இரு கண்மாய்கள் அருகருகே உள்ளன. 

இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வைகை ஆற்றில் தண்ணீர் வரும் போது, சங்ககோணாம்பட்டி தடுப்பணையில் இருந்து பிரிந்து வரும் வாய்க்கால் மூலம் இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் வரும்.

வைகை ஆறு வறண்டு கிடப்பதால் அம்மச்சியாபுரம் பகுதிகளில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தங்களின் விளைநிலங்களில் கரும்பு, கம்பு, மக்காச்சோளம், பருத்தி போன்ற மாற்று பயிர் சாகுபடிக்கு மாறி விட்டனர். சிலர் தென்னை விவசாயத்துக்கு மாறிவிட்டனர். தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் விளை நிலங்கள் தரிசாக மாறி விவசாயத்தை விட்டும் விவசாயிகள் வெளியேறும் அபாயம் உள்ளது. 

எனவே, வைகை ஆற்றின் வளத்தை பாதுகாக்கவும், வைகையின் ஆதாரமாக உள்ள மேகமலை, வெள்ளிமலை மலைப்பகுதிகளில் வன வளத்தை பாதுகாக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்