தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த பிற்படுத்தப்பட்டோர் குடும்பத்தை முன்னேற்ற புதிய கடன் திட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனாவால் இறந்தால், அவரது குடும்பத்தை முன்னேற்ற புதிய கடன் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

Update: 2021-07-14 11:06 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனாவால் இறந்தால், அவரது குடும்பத்தை முன்னேற்ற புதிய கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடன் திட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்து இருந்தால், அவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் ஸ்மைல் என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.
மானியம்
அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனா வைரசால் உயிர் இழந்ததற்கான ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்