வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழந்தது

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழந்தது.

Update: 2021-07-14 06:25 GMT
வண்டலூர், 

கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக சென்னையை அடுத்த வண்டலூர் பூங்கா கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மே மாதம் 26-ந்தேதி பூங்காவில் உள்ள சில சிங்கங்கள் சோர்வுடன் காணப்பட்டதால், 11 சிங்கங்களுக்கு சளி மாதிரிகள் சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் 9 வயதுடைய நீலா என்ற பெண் சிங்கம், அன்றைய தினமே உயிரிழந்தது. சில நாட்களுக்கு பிறகு 12 வயதுடைய பத்மநாபன் என்ற ஆண் சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் மற்றும் பூங்கா மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கடந்த 2006 -ம் ஆண்டு டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பீஷ்மர், அனு என்ற ஒரு ஜோடி வெள்ளைப்புலிகள் கொண்டுவரப்பட்டன. பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த வெள்ளைப்புலி ஜோடிகள் இரண்டும் அடிக்கடி இணை சேர்ந்து 5-க்கும் மேற்பட்ட வெள்ளைப்புலி குட்டிகளை ஈன்றுள்ளது.

இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 17 வயதுடைய பீஷ்மர் ஆண் சிங்கம் நேற்று திடீரென உயிரிழந்துள்ளது.

இந்த வெள்ளைப்புலி வயது முதிர்வு காரணமாக இறந்ததா? கொரோனா தொற்றால் இறந்ததா? என்பது குறித்து பிரேத பரிசோதனை மற்றும் ஆய்வு முடிவுகளில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வண்டலூர் பூங்காவில் சமீபத்தில் 2 சிங்கங்கள் உயிரிழந்தது. இதனையடுத்து ஒரு வெள்ளை புலி உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்