வீடு, நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.37 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
வீடு மற்றும் நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.37 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
திருச்சி,
வீடு மற்றும் நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.37 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
ரியல் எஸ்டேட் அதிபர்
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 60). விவசாயியான இவர், வீடு மற்றும் நிலம் வாங்கி விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்.பி.ஐ.காலனியை சேர்ந்தவர் வரதராஜன். அவரது மனைவி மாலினி. இவர்கள் செல்வகுமாரின் குடும்ப நண்பர்கள்.
கணவன், மனைவி இருவரும் திருச்சியை அடுத்த நாச்சிக்குறிச்சி பகுதியில் அப்பார்ட்மெண்டில் பி பிளாக்கில் கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய 1,005 சதுர அடிக்கொண்ட வீட்டை விலைக்கு தருவதாக ரூ.15 லட்சம் செல்வகுமாரிடம் பெற்றுக்கொண்டு கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். பின்னர் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் மேலும் ரூ.6 லட்சம் பெற்றுக்கொண்டு கிரயம் செய்து தருவதாக காலநீட்டிப்பு செய்துள்ளனர்.
நிலத்தை காட்டி மோசடி
ஆண்டுகள் பல கடந்தும் அங்கு வீடு கட்டிதராமலும், கிரயம் செய்து கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. விசாரித்ததில் வரதராஜன் அந்த அபார்ட்மெண்டில் வீடு கிரயம் செய்து கொடுப்பதற்கு எவ்வித உரிமையும் பெற்றவர் இல்லை என்பது தெரியவந்தது.
இதுபோல ஸ்ரீரங்கம் தாலுகாவுக்குட்பட்ட அளுத்தூர் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான மனைப்பிரிவில் 10 பிளாட்டுகளை கிரயம் செய்து தருவதாக செல்வகுமாரிடம் இருந்து 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் அட்வான்சாக ரூ.16 லட்சத்தை வரதராஜனும் அவரது மனைவி மாலினியும் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. விசாரித்ததில், அந்த நிலம் அவர்களுக்கு மட்டும் சொந்தமில்லை என்றும், பங்குதாரர்கள் பலர் உள்ளதும் தெரிய வந்தது.
ரூ.37 லட்சம் மோசடி
அபார்ட்மெண்டில் வீடு மற்றும் அளுத்தூர் கிராமத்தில் வீட்டு மனைகள் கிரயம் செய்து தருவதாக மோசடி செய்ததை அறிந்த செல்வகுமார், கணவன்- மனைவி இருவரையும் சந்தித்து அட்வான்சாக கொடுத்த ரூ.37 லட்சம் தொகையை திரும்ப தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.
பலமுறை கேட்டும் இழுத்தடித்த அவர்கள், ஒரு கட்டத்தில் அவதூறான வார்த்தைகளால் பேசி கொலை செய்து விடுவதாகவும் செல்வகுமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் தனது மனைவியை வைத்துக் போலீசில் புகார் கொடுப்பேன் என்றும் வரதராஜன் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
தம்பதி மீது வழக்கு
எனவே, தன்னிடம் மோசடிகளில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செல்வகுமார் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி, மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் நேற்று வரதராஜன் அவரது மனைவி மாலினி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.