சாலையில் கிடந்த தங்க மோதிரத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபர்
தென்காசியில் சாலையில் கிடந்த தங்க மோதிரத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபரை போலீசார் பாராட்டினர்.
தென்காசி:
தென்காசி தைக்கா தெருவைச் சேர்ந்தவர் ஷேக் முகமது இப்ராகிம் (வயது 34). இவர் தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் செல்போன் உதிரிபாகங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது கடையில் இருந்து சென்றபோது, சாலையில் 3 கிராம் எடை கொண்ட ஒரு தங்க மோதிரத்தை கண்டெடுத்தார். உடனே அவர் அந்த மோதிரத்தை தென்காசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த ேமாதிரம் ஆய்க்குடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் முத்துச்செல்வம் (27) என்பவருக்கு உரியது என்பதும், அவர் அங்குள்ள பேக்கரி கடையில் கேக் வாங்க வந்தபோது மோதிரத்தை தவறவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துச்செல்வத்தை தென்காசி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, அவரிடம் மோதிரத்தை ஷேக் முகமது இப்ராகிம் மூலம் வழங்கினர். மேலும் ஷேக் முகமது இப்ராகிமின் நேர்மையை பாராட்டி அவருக்கு போலீசார் சால்வை அணிவித்து பரிசு வழங்கினர்.