தென்காசிக்கு 6,700 கொரோனா தடுப்பூசிகள் வந்தது
தென்காசி மாவட்டத்திற்கு 6,700 கொரோனா தடுப்பூசிகள் நேற்று வந்தது.
தென்காசி:
கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு நேற்று 6,700 தடுப்பூசிகள் வந்தன. சுகாதாரத்துறை மூலம் இவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றிற்கு அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன. மொத்தம் மாவட்டத்தில் உள்ள 56 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது.
தென்காசி நகராட்சி 1-வது வார்டு தொடக்கப்பள்ளியில் வர்த்தக சங்கம் சார்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில் இளம்பெண்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.இந்த முகாமில் நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம், சிவா, மகேஷ், வர்த்தக சங்க தலைவர் ராஜசேகரன், செயலாளர் பரமசிவன், துணைச் செயலாளர் முருகன் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் வடகரை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இப்ராகிம், டாக்டர் ஜூனைதா மற்றும் செவிலியர்கள் தடுப்பூசிகளை செலுத்தினர்.