மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது; எடியூரப்பா திட்டவட்டம்

“தமிழகத்தின் முடிவு பற்றி கவலைப்பட மாட்டோம். மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது” என்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று உறுதிபட தெரிவித்தார்.;

Update: 2021-07-13 21:24 GMT
முதல்-மந்திரி எடியூரப்பா.
பெங்களூரு:“தமிழகத்தின் முடிவு பற்றி கவலைப்பட மாட்டோம். மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது” என்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று உறுதிபட தெரிவித்தார்.

கவலைப்பட மாட்டோம்

பெங்களூருவில் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு உரிய அனுமதியை தரவேண்டும் என்றும் திட்டத்தின் சாதக பாதக அம்சங்கள் குறித்தும் மத்திய மந்திரியிடம் கர்நாடக அரசு சார்பில் எடுத்து கூறப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“மேகதாது திட்ட விஷயத்தில் தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். எங்கள் நீர் எங்கள் உரிமை. அந்த உரிமையை நாங்கள் பயன்படுத்துகிறோம். மேகதாது திட்டம் குடிநீருக்காக அமல்படுத்தப்படுகிறது. இதற்கு குறுக்கீடு செய்வது சரியல்ல. இந்த விஷயத்தில் எந்த மாநிலமாக இருந்தாலும் என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

யாராலும் தடுக்க முடியாது

இது கர்நாடகத்தின் உரிமை என்பதால் மேகதாது திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய நீர்ப்பாசனத்துறை ஆணையம் முன்பு தாக்கல் செய்ய உள்ளோம். மத்திய அரசு கர்நாடகத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த மேகதாது திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்க வேண்டும். இதுகுறித்து மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கூறியுள்ளேன். இந்த விஷயத்தில் அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதி அளித்துள்ளார். எத்தினஒலே, கிருஷ்ணா உள்பட அனைத்து நீர்ப்பாசன திட்டங்கள் குறித்தும் அவருடன் ஆலோசனை நடத்தினேன். இவற்றுக்கு மத்திய அரசிடம் இருந்து விரைவாக ஒப்புதல் பெறப்படும். கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

அமல்படுத்தியே தீருவோம்

மேகதாது திட்ட விஷயத்தில் கர்நாடகம்-தமிழ்நாட்டிற்கு இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது. மேகதாது திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று கர்நாடகம் பிடிவாதமாக கூறி வருகிறது. இதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்