2 குழந்தைகளை எரித்துக் கொன்று தாய் தற்கொலை

கடையம் அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்று விட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-07-13 21:14 GMT
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செக்கடியூர் பகுதியைச் ேசர்ந்தவர் சரவணன் என்ற சுரேஷ் (வயது 35). இவருக்கும், தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மகள் கவுரி என்ற கனகா (30) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கீர்த்தனு (5) என்ற ஆண் குழந்தையும், இலக்கியா (2) என்ற பெண் குழந்தையும் உண்டு. சுரேஷ் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கனகா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதற்கிடையே, கடந்த சில மாதங்ளுக்கு முன்பு சுரேஷ் மீது கனகா ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சுரேசை எச்சரித்து கனகாவுடன் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கணவன்-மனைவி ஒன்றாக செக்கடியூரில் வாழ்ந்து வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் அவர்களுக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு சுரேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த கனகா தனது குழந்தைகளுடன் வீட்டிற்குள் சென்று, கதவை பூட்டிக் கொண்டார்.

பின்னர் சமையல் அறையில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து, மனதை கல்லாக்கிக் கொண்டு தன் மீதும், 2 குழந்தைகள் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று விட்டிற்குள் பார்த்தனர். அங்கு கனகா, 2 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக கடையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னிவளவன், கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கனகாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

கடையம் அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்