வங்கி தேர்வில் கன்னடத்தை புறக்கணித்தது அநீதி; நிர்மலா சீதாராமன் மீது சித்தராமையா குற்றச்சாட்டு
வங்கி தேர்வில் கன்னட மொழியை புறக்கணித்து அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.;
பெங்களூரு: வங்கி தேர்வில் கன்னட மொழியை புறக்கணித்து அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கன்னடர்களுக்கு அநீதி
தேசிய வங்கிகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப வங்கி பணி நியமன தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கன்னட மொழியில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. இது கன்னடர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. மத்திய அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி இந்த அநீதியை சரிசெய்ய வேண்டும். மொத்தம் 3,000 காலி இடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் கர்நாடகத்தில் மட்டும் 407 இடங்கள் உள்ளன.
கன்னட மொழியில் தேர்வு எழுத அனுமதி வழங்காததால், கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-க்கு முன்பு வரை இந்த வங்கி தேர்வை அனைத்து மாநில மொழிகளிலும் எழுத முடியும் என்ற நிலை இருந்தது. அதன் பிறகு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே இந்த தேர்வை எழுதும் ஏற்படுத்தப்பட்டது.
திட்ட பயன்கள்
தொடக்கத்திலேயே, வங்கி தேர்வை கன்னடத்திலும் எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கன்னட மொழியிலும் தேர்வு எழுத அனுமதி அளிப்பதாக உறுதி அளித்தார். அவர் அளித்த உறுதிமொழியை இன்று வரை நிறைவேற்றவில்லை. சமீப காலமாக மத்திய-மாநில அரசுகளின் திட்ட பயன்கள் வங்கி மூலம் பயனாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
கன்னடம் தெரியாத ஊழியர்கள் வங்கியில் பணியாற்றினால் உள்ளூர் கன்னட மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் தொடர்ந்து கன்னடத்தை புறக்கணித்து அநீதி இழைத்து வருகிறார். இப்போது வங்கி தேர்விலும் கன்னடத்திற்கு அநீதி இழைத்துள்ளார். கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அநீதி குறித்து கேள்வி கேட்காமல் பா.ஜனதா எம்.பி.க்கள் மவுனம் காக்கிறார்கள். இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவும் கேள்வி எழுப்பாமல் அமைதியாக உள்ளார்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.