ஆன்மிக அரசியலை ரஜினிகாந்த் ஆதரிக்க வேண்டும்- அர்ஜூன் சம்பத் பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை ஆதரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
நெல்லை:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்து மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகி முருகானந்தத்தை தாக்கியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இந்து மக்கள் கட்சி எப்போதும் வன்முறையை ஆதரிப்பது இல்லை. மேலும் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு 3 வாசல்கள் திறக்கப்பட்டு உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எனவே இங்கு தொழில் வளர்ச்சி ஏற்படவும், விவசாயம் உள்ளிட்டவை வளர்ச்சி பெறவும், தென்மாவட்டங்களை ஒன்று சேர்த்து தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதை பிரித்து 3 மாநிலங்களாக உருவாக்க வேண்டும். இதை நாட்டின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறோமே தவிர, பிரிவினைவாதத்திற்காக அல்ல. கொங்கு மண்டலம், சென்னையை தலைமையிடமாக கொண்ட மாநிலம், தென் மாவட்டங்களை உள்ளடக்கிய மாநிலம் என்று 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். தமிழகத்தை பிரிக்கக்கூடாது என்று அ.தி.மு.க.வை சேர்ந்த முனுசாமி கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து. அது அ.தி.மு.க.வின் கருத்து அல்ல.
இந்தியாவை பிரிக்க வேண்டும் என்று சீமான் கூறினால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மாவட்டங்களில் தேசவிரோத சக்திகள் ஊடுருவி உள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படுகிற பணிகளை தடுக்கின்றனர். தொழிற்சாலைகள், துறைமுகங்கள் வருவதை தடுக்கிறார்கள். அந்த தேசவிரோத சக்திகளால் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழக அரசுதான் காரணம்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. ஆனால் அவர் ஆன்மிக அரசியலையும், தேசிய அரசியலையும் ஆதரிக்க வேண்டும். லியோனியை பாடநூல் கழக தலைவராக நியமனம் செய்தது தவறானது ஆகும். தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக பணியாற்றி வருகிறார். பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டிடம் கட்டக்கூடாது. அது தசரா திருவிழா நடைபெறக்கூடிய இடம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.