காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசனம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனிடையே அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த 6-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 674 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன்பிறகு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததன், காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக கடந்த 9-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 595 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
குறைப்பு
இந்த நீர்வரத்து மீண்டும் குறைய தொடங்கியது. கடந்த 10-ந் தேதி நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 535 கனஅடியாக குறைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 7 கனஅடியாக குறைந்தது. இதனிடையே நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 1,479 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதே போல காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த சில நாட்களாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நீர்மட்டம்
அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 73.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 73.02 அடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையின் இடது கரை பகுதியில் தண்ணீரில் மூழ்கி இருந்த பகுதிகள் வெளியே தெரிய தொடங்கி உள்ளன.