பத்திரப்பதிவு துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்

பொதுமக்கள் எளிமையான முறையில் பதிவு செய்ய பத்திரப்பதிவு துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று சேலத்தில் அமைச்சர் மூர்த்தி கூறினார்.

Update: 2021-07-13 20:01 GMT
சேலம்
பொதுமக்கள் எளிமையான முறையில் பதிவு செய்ய பத்திரப்பதிவு துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று சேலத்தில் அமைச்சர் மூர்த்தி கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
சேலம் கோட்ட வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். வணிக வரித்துறை ஆணையாளர் சித்திக், செயலாளர் ஜோதிநிர்மலாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு வரி விதிப்பு மற்றும் வணிகர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து பேசினார்.
தொடர்ந்து வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்ய என்ன வழி என்பது குறித்து கேட்டு அறிந்தார். இதைத்தொடர்ந்து வணிகர்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். தொடர்ந்து வணிகர் சங்க நிர்வாகிகள் அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். கூட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வணிகவரித்துறை அலுவலர்கள்
பின்னர் மதியம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வணிக வரித்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.க்கள் பார்த்திபன், கவுதமசிகாமணி, செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், ஈஸ்வரன், ராமலிங்கம், பொன்னுசாமி, வெங்கடேஸ்வரன், வெங்கடேசன், வீரபாண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.வெண்ணிலா சேகர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறையை பொருத்தவரையில் வணிகர்களிடம் தொழில் செய்வதில் என்னென்ன இடையூறுகள் இருக்கிறது?, ஜி.எஸ்.டி. செலுத்துவதில் தொழிலுக்கு தொழில் வித்தியாசம் இருப்பது உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளும் கேட்டறியப்பட்டது. இது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு தெரிவிக்க உள்ளோம்.
கடந்த கால ஆட்சி ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையை விட்டு சென்றுள்ளது. வணிக வரியில் 10 ஆண்டு முதல் 18 ஆண்டுகள் வரை ஒரே மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் அனைவரையும் கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறோம்.
மாற்றங்கள்
பத்திரப்பதிவு துறையில் பொதுமக்கள் எளிமையான முறையில் பதிவு செய்வதற்கான சில மாற்றங்கள் கொண்டு வரப்படும். இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களே பத்திர பதிவிற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்து இருக்கிறோம். அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். அரசு நிலங்கள், கோவில் நிலங்கள், வழிபாட்டு தலங்களின் நிலங்களை பதிவு செய்யக்கூடாது என்று சட்டங்கள் உள்ளன. இதுதொடர்பாக ஆதாரப்பூர்வமாக புகார் வந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்