பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
தொண்டி அருகே பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு;
தொண்டி
தொண்டி அருகே உள்ள நம்புதாளை, நம்பு ஈஸ்வரர் கோவிலில் உள்ள ஒரு பாறைக்கல்லின் 3 பக்கத்தில் கல்வெட்டு உள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு இந்த கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது, ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என தொடங்கும் இக்கல்வெட்டில் மொத்தம் 61 வரிகள் உள்ளன. பல ஆண்டுகளாக வெட்டவெளியில் கிடந்ததால் இதன் இரு பக்கங்களில் இருந்த எழுத்துகள் பெருமளவு அழிந்து விட்டன. கல்வெட்டில் மன்னர் பெயர் இல்லை. இக்கோவில் நம்புதாளையில் இருந்தாலும், கல்வெட்டில் தொண்டியான பவித்ர மாணிக்கப்பட்டினத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது கி.பி.13-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இதில் மடத்துக்கு தானமாக வழங்கிய நிலத்தின் எல்லையை குறிப்பிடும் போது கிழக்கில் ராரா பெருவழி என குறிப்பிடப்படுகிறது. இது ராஜராஜசோழனின் பெயரில் அழைக்கப்படும் கிழக்குக் கடற்கரை பெருவழியாகும். தற்போது நம்பு ஈஸ்வரர் என சுவாமி அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் குலசேகர பாண்டீஸ்வரமுடையார் எனப்படுகிறார். இது குலசேகரப் பாண்டியன் எனும் அரசனின் பெயரால் அமைக்கப்பட்ட கோவிலாக உள்ளது. கல்வெட்டில் சொல்லப்படும் கங்கை நாராயண சக்கரவத்தி திருப்புல்லாணி, தளிர்மருங்கூர், மேல்நெட்டூர், அருவிமலை கோவில் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறார். இவர் இப்பகுதியின் குறுநிலத் தலைவராகவும், அரசனின் ஆணைகளை நிறைவேற்றுபவராகவும் இருந்துள்ளார் என்றார்.