மனவளர்ச்சி குன்றியவரை கொன்று புதைத்ததாக புகார்: அதிராம்பட்டினம் காப்பக வளாகத்தில் சிக்கியது சிறுவனின் எலும்புக்கூடு தானா? டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு

அதிராம்பட்டினம் காப்பக வளாகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை கொன்று புதைத்ததாக தெரிவித்த புகாரின் அடிப்படையில் தோண்டப்பட்டதில் மண்டை ஓடு, எலும்புக்கூடு கிடைத்தது. இவை சம்பந்தப்பட்ட சிறுவனின் எலும்புக்கூடு தானா? என்பதை கண்டறிய போலீசார் டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Update: 2021-07-13 19:51 GMT
அதிராம்பட்டினம்:-

அதிராம்பட்டினம் காப்பக வளாகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை கொன்று புதைத்ததாக தெரிவித்த புகாரின் அடிப்படையில் தோண்டப்பட்டதில் மண்டை ஓடு, எலும்புக்கூடு கிடைத்தது. இவை சம்பந்தப்பட்ட சிறுவனின் எலும்புக்கூடு தானா? என்பதை கண்டறிய போலீசார் டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கொன்று புதைத்ததாக புகார்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் ஷேக் அப்துல்லா என்பவர் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் 20-க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த காப்பகத்தில் திருப்பூரை சேர்ந்த அபுபக்கர்(வயது 10) என்ற சிறுவன் கடந்த 2017-ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய நிலையில் சேர்க்கப்பட்டான்.
அந்த சிறுவனை அடித்துக்கொன்று காப்பக வளாகத்தில் புதைத்து விட்டதாக காப்பக நிர்வாகி ஷேக் அப்துல்லாவின் மனைவி கலீமாபீவி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார். அதன் பேரில் தாசில்தார் தரணிகா, துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மற்றும் அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காப்பக நிர்வாகி ஷேக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தினர்.

எலும்புக்கூடு கண்டெடுப்பு

மேலும் சிறுவனை புதைத்ததாக கூறப்பட்ட இடத்தில் தோண்டிய போது அதில் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு இருந்தது. அவற்றை டாக்டர்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் சிறுவன் தாக்கப்பட்டு இறந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
இருப்பினும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு சிறுவனின் எலும்புக்கூடு தானா? என்பதை போலீசார் உறுதி செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக சூப்பர் இம்போசிங் பரிசோதனைக்கும், டி.என்.ஏ.  பரிசோதனைக்கும் சென்னைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

டி.என்.ஏ. சோதனை

திருப்பூரை சேர்ந்த சிறுவன் அபுபக்கரின் தாய் இறந்து விட்டார். தந்தையும் விட்டு விட்டு சென்றதால் 80 சதவீதம் வரை மனநலம் பாதித்ததோடு, காலும் ஊனமுற்ற நிலையில் இருந்ததால் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான். 
இதனால் சிறுவனின் தந்தையை கண்டறிந்து, அவரின் உதவியோடு, காப்பக வளாகத்தில் கிடைத்த சிறுவனின் எலும்புக்கூடு அபுபக்கருடையதுதானா? என்பதை கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்தப்படுகிறது.

சென்னைக்கு அனுப்பி வைப்பு

இதற்காக காப்பக வளாகத்தில் தோண்டிய போது கிடைத்த எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓட்டை, டாக்டர்கள் நேற்றும் ஆய்வு மேற்கொண்டனர். கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் இன்று அல்லது நாளை பரிசோதனைக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்