கண்மாயில் இருந்து வீணாகும் நீர்

வத்திராயிருப்பு அருகே மதகு சேதமடைந்து இருப்பதால் கண்மாயில் இருந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-13 19:04 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே மதகு சேதமடைந்து இருப்பதால் கண்மாயில் இருந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். 
கண்மாய்கள் 
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் பெரியகுளம் கண்மாய், விராகசமுத்திரம் கண்மாய், பூரிப்பாறை குளம், புங்கங்குளம், குணவந்த நேரி, பாதரங்குளம், வில்லவராயன்குளம் உள்பட 40 கண்மாய்கள் உள்ளன. இந்தநிலையில் கூமாப்பட்டி நெடுங்குளம் பகுதியில் உள்ள புங்கங்குளம் கண்மாயை நம்பி  200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்த தொடர்மழையினால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள், ஆறுகளில் நீர்வரத்து தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கிறது. 
தொடர்மழை 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளில் உள்ள 40 கண்மாய்களும் நீர் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்தநிலையில் நெடுங்குளம் பகுதியில் உள்ள புங்கங்குளம் கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த கண்மாயில் ஓரளவிற்கு நீர் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் இந்த கண்மாயில் உள்ள மதகின் ஷட்டர்  பழுதாகி காணப்படுகிறது. 
விவசாயிகள் கவலை 
இதனால்  இந்த கண்மாயில் இருக்கிற நீர் தொடர்ச்சியாக வெளியேறி வீணாகி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து கண்மாயில் உள்ள மதகுகளை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்