ரெயிலில் அடிபட்டு 6 மாடுகள் பலி

காரைக்குடியில் ரெயிலில் அடிபட்டு 6 மாடுகள் பலியாயின. 2 மாடுகள் உயிருக்கு போராடி வருகின்றன.

Update: 2021-07-13 18:20 GMT
காரைக்குடி,

காரைக்குடியில் ரெயிலில் அடிபட்டு 6 மாடுகள் பலியாயின. 2 மாடுகள் உயிருக்கு போராடி வருகின்றன.

ராமேசுவரம் பயணிகள் ரெயில்

திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு பயணிகள் ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் காரைக்குடி வழியாக சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு வந்தது.
அந்த ரெயில் காரைக்குடி ரெயில் நிலையத்துக்கு முன்பு பொன்நகர் ரெயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தது. அங்குள்ள தண்டவாளம் பகுதியில் சில மாடுகள் நின்றிருந்தன.

6 மாடுகள் சாவு

இதை பார்த்ததும் என்ஜின் டிரைவர் உஷாராகி அலாரம் கொடுத்தார். இருப்பினும் மாடுகள் தண்டவாளத்தை விட்டு நகரவில்ைல. இதை தொடர்ந்து என்ஜின் வேகத்தை குறைத்தவாறே டிரைவர் தொடர்ந்து அலாரம் எழுப்பினார். மாடுகள் கலைந்து செல்லாமல் தண்டவாளத்திலேயே சுற்றி திரிந்தன.
இந்த நிலையில் மாடுகள் மீது ரெயில் மோதியது. இதில் அவை தூக்கி வீசப்பட்டன. சில மாடுகள் சற்று தூரம் இழுத்து செல்லப்பட்டன.
பின்னர் அந்த ரெயில் காரைக்குடி ரெயில்நிலையத்துக்கு நேற்று காலை 8.30 மணிக்கு வந்து சேர்ந்தது. உடனே என்ஜின் டிரைவர், ரெயில் நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். இதன் பேரில் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தண்டவாளத்தில் 6 மாடுகள் செத்து கிடந்ததை பார்த்தனர். இதில் ஒரு ஜல்லிக்கட்டு காளையும் உண்டு. பின்னர் அவற்ைற ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். 2 மாடுகள் உயிருக்கு போராடின.

வழக்குபதிவு

பின்னர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரெயில் மோதியதில் பலியான மாடுகளின் உரிமையாளர்கள் யாராவது வருகிறார்களா? என காத்திருந்தனர். மாடுகளின் உரிமையாளர்கள் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. எனவே காரைக்குடி நகராட்சி தூய்மை பணியாளர்கள் வந்து பலியான மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதற்கிடையே உயிருக்கு போராடிய 2 மாடுகளுக்கு கால்நடைத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு ெசய்துள்ளனர்.

மேலும் செய்திகள்