மறுசுழற்சி முறையில் எரிபொருளாக மாற்றும் திட்டம்

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி முறையில் எரிபொருளாக மாற்றும் திட்டத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-07-13 18:08 GMT
திருவாரூர்;
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி முறையில் எரிபொருளாக மாற்றும் திட்டத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 
இயற்கை எரிபொருள்
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மறுசூழற்சி முறையில் இயற்கை எரிபொருளாக மாற்றும் திட்டத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் அனைத்து வகையான கடைகளும், தரமான சமையல் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். சமையல் எண்ணெய்யை 2 முறைகளுக்கு மேல் சூடுபடுத்தி பயன்படுத்து கூடாது.
கெட்ட கொழுப்பு
இவ்வாறு செய்தால் அதில் நச்சு தன்மை உருவாகி, கெட்ட கொழுப்பு அமிலங்கள் 3 சதவீதம் அதிகமாகி தரம் குறைந்து உண்ண தகுதியற்ற எண்ணெய்யாக மாறி விடுகிறது. இதனால் வயிற்றுப்புண், குடல்புற்றுநோய், உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், இதயநோய் மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே சமையல் எண்ணெய் மறுசூழற்சிக்காக அதை பாதுகாப்பான முறையில் சேகரித்து இயற்கை எரிபொருளாக பயன்படுத்துவதற்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. 
 எனவே உணவு வணிகர்கள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாமல் ஒப்படைக்க வேண்டும். இதன்படி பயன்படுத்திய எண்ணெய்யை சேகரிக்க சென்னை கேர்வெல் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கேன்கள் வணிகர் சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 
புகார்
மேலும் கொரோனா பரவிவரும் நிலையில் பணியாளர்கள் அனைவரும் முககவசம், கையுறை அணிந்தும், தனிமனித இடைவெளியை பின்பற்றியும் விற்பனை செய்ய வேண்டும். உணவு விற்பனையில் ஈடுபடும் வணிகர்கள் அரசு வழங்கும் அறிவுரைப்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ் அப் நம்பரில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சவுமியா சுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்