மாணவரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
நாகர்கோவிலில் மாணவரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மாணவரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரிவாள் வெட்டு
நாகர்கோவில் தம்மத்துகோணம் குருகுலம் சாலையை சேர்ந்தவர் பெபிலின் (வயது 21). இவர் சுகாதார ஆய்வாளர் படிப்பை முடித்துவிட்டு தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. படிக்க விண்ணப்பித்துள்ளார். சம்பவத்தன்று பெபிலின் இந்திரா தெரு பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் பெபிலினை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பெபிலினை வெட்டியவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் பெபிலினை அரிவாளால் வெட்டிய 2 பேர் நேற்று தனிப்படை போலீசாரிடம் சிக்கினர். பின்னர், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அனந்தன் பாலத்தை சேர்ந்த ஜோசப் வெலிங்டன் (22), சூர்யா (20) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் பெபிலினுடன் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஆனால், திடீரென இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஜோசப் வெலிங்டன், சூர்யா ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.