கோவில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை
நாகர்கோவிலில் கோவில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கோவில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவில்
நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜைகள் நடத்தப்படும். நேற்று முன்தினம் மாலை பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவில் நடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை பூசாரி கோவிலுக்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் கோட்டார் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகையை திருடி சென்றதோடு கோவிலில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி பொருட்களையும் திருடியது தெரிய வந்தது.
15 பவுன் நகை தப்பியது
மேலும் கோவிலில் நகைகள் வைத்திருந்த லாக்கரையும் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால் லாக்கரில் இருந்த 15 பவுன் நகை தப்பியது. இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவிலில் பதிந்திருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். அதோடு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கோவிலில் பல்வேறு இடங்களை மோப்பம் பிடித்த அந்த நாய் அங்கும் இங்குமாக ஓடி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதற்கிடையே கோவிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை சுமார் 2 மணியளவில் 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வரும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உண்டியல் பணம் திருட்டு
இந்த கோவிலில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அப்போதும் கோவில் பூட்டை மர்ம நபர்கள் உடைக்க முயன்று உள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனால் தற்போது கோவில் பூட்டை உடைத்து நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.