சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி-கூடலூர் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருவதால் மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை சூட்டிங்மட்டம் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேம்குமார் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். இருட்டில் வாகன முகப்பு விளக்கின் வெளிச்சத்தை பயன்படுத்தி மரம் வெட்டி அகற்றப்பட்டது.
பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்து வருகின்றன. இதனை மின் ஊழியர்கள் அகற்றி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-4.2, நடுவட்டம்-19, கிளன்மார்கன்-10, அவலாஞ்சி-34, எமரால்டு-14, அப்பர்பவானி-46, கூடலூர்-17, தேவாலா-16, செருமுள்ளி-16, பாடாந்துறை-13, பந்தலூர்-53, சேரங்கோடு-30 மழையும் பெய்தது. அதிகபட்சமாக பந்தலூரில் 5 சென்டி மீட்டர் மழை பெய்தது.