வழிப்பறியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் கைது
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு டவுன் குல்ஜார் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் யூனூஸ் நபில் (வயது 23). இவர் பங்களாமேடு பகுதியில் கை உறைகள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் யூனூஸ் நபில் தனது குடோனுக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பேரணாம்பட்டு அருகே கள்ளிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த குடியாத்தம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் வேதாச்சலம் (41) என்பவர் தனது கூட்டாளிகளான பேரணாம்பட்டு டவுன் ஆதம்சா தெருவைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணை செயலாளர் முஹம்மது பாஷா (31), மசிகம் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் ஆகியோருடன் சேர்ந்து யூனூஸ் நபிலை வழி மறித்து மிரட்டி அவரிடமிருந்த 400 ரூபாயை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து யூனூஸ் நபில், தனது அண்ணன் அதிக் என்பவரிடம் கூறினார். அதைத்தொடர்ந்து குடியாத்தம் ரோடு புத்துக்கோவில் அருகில் நின்றிருந்த வேதாச்சலம் உள்ளிட்டவர்களிடம் கேட்ட போது, அதிக்கையும் மிரட்டினர். அதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் யூனூஸ் நபில் கொடுத்த புகாரின் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் வேதாச்சலம், அவரது கூட்டாளி ஆட்டோ டிரைவர் முஹம்மது பாஷா ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குமரேசனை தேடி வருகின்றனர்.