பள்ளி மாணவி கிணற்றில் இருந்து பிணமாக மீட்பு

செஞ்சி அருகே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பள்ளி மாணவி கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-13 17:16 GMT
செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகள் ரம்யா(வயது 14). இவர், அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாலை மாணவி ரம்யா திடீரென மாயமானார். இது குறித்து பச்சையப்பன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது மகளை 17 வயது சிறுவன் கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

கிணற்றில் பிணம் 

இதற்கிடையில் நேற்று காலையில் அதே ஊரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது விவசாய கிணற்றில் ரம்யா பிணமாக மிதந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டனர். 
பின்னர் அவர்கள், மாணவியை சில வாலிபர்கள் கொலை செய்து கிணற்றில் வீசியதாகவும், அவர்களை கைது செய்யக்கோரியும் செஞ்சி- திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

7 வாலிபர்களிடம் விசாரணை 

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, கிணற்றில் மிதந்த மாணவி ரம்யாவின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் கொலை செய்த வாலிபர்களை கைது செய்த பிறகே மாணவியின் உடலை எடுக்க வேண்டும் என்று கூறி போலீசாரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அதற்கு போலீசார் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறினர். 
இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 
அதன்பிறகு மாணவியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மாணவி இறந்தது தொடர்பாக 7 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்