கொரோனாவுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
கம்பம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரை கொரோனா பறித்தது.;
தேனி:
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 50). இவர் கம்பம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். அவர் தனது மனைவி பரிமளா (41), மகள் நிகிதா (19), மகன் பாலாஜி (14) ஆகியோருடன் கம்பம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த 2-ந்தேதி இவருக்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், உத்தமபாளையம் அருகே கோம்பையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கொரோனாவுக்கு பலி
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று அவருடைய உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, போலீஸ் மரியாதையுடன் கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதுவரை தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 போலீசார் பலியாகி உள்ளனர். தற்போது அழகேசன் பலியானதை தொடர்ந்து எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே, மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 672 ஆக உயர்ந்தது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் நேற்று குணமாகினர். தற்போது 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.